வணிகம்

வரி செலுத்துவோருக்கு தரமான சேவை: வருமான வரி தலைமை ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: வரி செலுத்துவோருக்கு தரமான சேவை வழங்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் சஞ்சய் குமார் வர்மா தெரிவித்தார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல நேரடி வரிகள் ஆலோசனை குழு கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், குழு உறுப்பினரான எம்.தம்பிதுரை எம்.பி. பேசியபோது, ‘‘இக்குழுவின் ஆலோசனைகளை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பலாம். மேலும், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், உற்பத்தியாளர்கள், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் என பலதரப்பட்ட பயனாளர்களிடம் இருந்து வருமான வரி தொடர்பான கருத்துகளை இக்குழு சேகரிப்பது அவசியம்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்தும், வரவேற்புரையிலும் வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் சஞ்சய் குமார் வர்மா பேசியதாவது:

உறுப்பினர்களின் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்படும். வரி செலுத்துவோருக்கு சிறந்த சேவையை வழங்குவது குறித்து ஆலோசனை பெற chennai.dcit.hq.coord@incometax.gov.in என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தலாம்.

பெறப்படும் கருத்துகள் குறித்து விவாதிக்க அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய கூட்டம் நடத்தப்படும். இதன்மூலம், வரி செலுத்துவோருக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறும்.

வரி செலுத்துவோர் - வருமான வரித் துறை இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், ஊக்குவிப்பதும், நிர்வாக, நடைமுறை சிக்கல்களை நீக்குவதுமே இக்குழுவின் நோக்கம். வரி செலுத்துவோருக்கு தரமான சேவை வழங்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கணினிமயமாக்கல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் போன்றவை அதற்கு பேருதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள், குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT