வணிகம்

தகவல் பலகை: பயிர் காப்பீடு திட்டம்

செய்திப்பிரிவு

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த விவசாயி தன் வயலில் அறுவடை செய்து களத்தில் வைத்திருந்த பயிர், புயல் அல்லது மழை காரணமாக அழிய நேரிட்டால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் பயிர் காப்பீட்டு அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்பட்ட சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஒரு விவசாயி, தன் வயலில் சாகுபடி பணிகளைத் தொடங்கிய பிறகு, போதுமான மழை இல்லாதது அல்லது அதிக மழை காரணமாக விதைப்பு அல்லது நடவுப் பணியைத் தொடர முடியாமல் போனால், பயிர் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்கும்.

அதிக மழை அல்லது அதிக வறட்சி அல்லது பிற இயற்கை சீற்றங்களால் பயிர் சாகுபடி பாதித்து, மகசூல் பாதிப்பு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கும் என தெரிய வந்தால், 25 சதவீத காப்பீட்டுத் தொகை முதலில் வழங்கப்படும். மகசூல் இழப்பீடு பற்றி துல்லியமாக இறுதி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மீதி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

இதற்கு முன்னர் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வந்தன.

இந்த ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் மேம்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகை முழுவதையும் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனமே வழங்கிட வேண்டும்.

SCROLL FOR NEXT