வணிகம்

வரலாறு காணாத நிதி நெருக்கடியில் ஜவுளித் தொழில்: மத்திய, மாநில அரசுகள் உதவ ‘சைமா’, ‘சிட்டி’ கோரிக்கை

செய்திப்பிரிவு

கோவை: வரலாறு காணாத நிதி நெருக்கடியை ஜவுளித்தொழில் எதிர்கொண்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என ‘சைமா’, ‘சிட்டி’ தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கோவை இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (சிட்டி) தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் உள்ளிட்டோர் கூறியதாவது: ரஷ்யா - உக்ரைன் இடையே நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு, பண வீக்கம், உலகளவிலான பொருளாதார மந்தநிலை, பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத நிதி நெருக்கடியை ஜவுளித் தொழில் எதிர்கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் 18 சதவீதம் சரிவு, பருத்தி ஜவுளி ஏற்றுமதியில் 23 சதவீதம் சரிவு போன்ற காரணங்களால் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஜவுளி நிறுவனங்களுக்கு வங்கிகள், சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உற்பத்தி மற்றும் நூல் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

பஞ்சு விலை ஒரு கேண்டி (355 கிலோ) தற்போது ரூ.56 ஆயிரமாக குறைந்துள்ளது. ஒரு கிலோ நூலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை நூற்பாலைகள் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன. பருத்தி மீது விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தரக்கட்டுப்பாடு ஆணைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நீக்கி செயற்கை இழைகளுக்கு பன்னாட்டு விலையில் கிடைக்க வழிவகை செய்து தொழிலில் சமதளம் உருவாக்க வேண்டும்.

மாநில அரசு சார்பில், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு அதிகபட்சமாக நிலைக் கட்டணம் 20 சதவீதம் வரையோ அல்லது பதிவாகும் மின் அளவுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கவோ வேண்டும். குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கு ரூ,75, ரூ.15, ரூ.550 என்ற நிலைக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும். குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கு வசூலிக்கப்படும் அதிகபட்ச நுகர்வு கட்டணத்தை ரத்து செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய வங்கிகள் சங்கத்துக்கு நாங்கள் அனுப்பியுள்ள மனுவில், ‘கடனுக்கான அசலை திருப்பிச் செலுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். மத்திய அரசால் வழங்கப்பட்ட கரோனா நிவாரண மூன்றாண்டு காலக் கடனை, 6 ஆண்டுகளாக மாற்ற வேண்டும். நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தொழில் நிறுவனங்களை கருத்தில் கொண்டு நடப்பு நிதி மூலதனத்துக்கு தேவையான கடனை வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT