ஈரோடு: ஈரோட்டில் கூலி உயர்வு கோரி 3-வது நாளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கியுள்ளதாக தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர்.
ஈரோடு மாநகராட்சியில் பூங்கா சாலை, மூலப்பட்டறை குப்பைகாடு போன்ற பகுதியில் 150-க்கும் மேற்பட்ட சரக்கு லாரி போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து லாரிகள் மூலம், ஜவுளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசி யேஷனுடன் இணைந்து அனைத்து தொழிற்சங்கங்களும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு, பிற சலுகைகள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்பட வில்லை. கூலி உயர்வு கோரி தொழிற் சங்கத்தினர் போராடி வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் சுமுக முடிவு ஏற்படவில்லை.
தொடர்ந்து கடந்த 13-ம் தேதி முதல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் ரூ.300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கியுள்ளதாக தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர். இதனிடையே, கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள், அனைத்து தொழிற்சங்கத்தினர் ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.எஸ்.தென்னரசு, டிபிடிஎஸ் தலைவர் மனோகரன் ஆகியோர் பேசினர். ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் மாதையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.