பொதுத்துறை நிறுவனமான இந்திய உருக்கு ஆணையத்தின் (செயில்) 5 சதவீத பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்து மூலமாக அளித்த பதிலில், தற்போது செயில் நிறுவனத்தில் அரசுக்கு 80 சதவீத பங்கு உள்ளது. இதில் 5 சதவீதத்தை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது நடப்பு நிதி ஆண்டில் மேற்கொள்ளப்படும். தற்போது செயில் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ. 88.95 ஆகும். இந்த விலையில் 5 சதவீத பங்குகளை விற்றால் அரசுக்கு ரூ. 1,800 கோடி கிடைக்கும்.
ஓஎன்ஜிசி: இதேபோல மற்றொரு பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் இயற்கை எரிவாயு (ஓஎன்ஜிசி) நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்தார். இதன் மூலம் அரசுக்கு ரூ. 17 ஆயிரம் கோடி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவில் ஓஎன்ஜிசி பங்கு விலை 4.23 சதவீதம் சரிந்து ரூ. 397.60-க்கு விற்பனையானது.