கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே திம்மாபுரத்தில் கடந்த 1952-ம் ஆண்டு அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை தொடங்கப்பட்டது. இப்பண்ணையில் உள்ளூர் மற்றும் ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் விளைவிக்கப்படும் பல்வேறு மா மரங்கள் உள்ளன.
இப்பண்ணையில், உயர் ரக மா ஒட்டுச் செடிகளான ஜகாங்கீர், இமாயுதின், இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, பஞ்சவர்ணம், செருகு போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், நிகழாண்டில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 36 ரக மாம்பழங்கள் பண்ணையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: திம்மாபுரம் பண்ணையில் மாமரங்கள் தோட்டமாகவும், தாய் செடியாகவும் பராமரிக்கப்படுகிறது. இதில், 36 மா ரகங்கள் பழத்தோட்டங்களாகவும், 51 ரகங்கள் தாய் செடிகளாகவும் உள்ளன. இங்கு பெங்களூரா, நீலம், சேலம் பெங்களூரா, இமாயுதின், காளபாட், ருமானி, பாதிரி, பீத்தர், பைரி, மல்கோவா, ஜகாங்கீர், செர்ணா ஜகாங்கீர், கே 8, கேஓ 11, 4/3, 2/16, 9/7, மோகன்தாஸ், ஜெய்லர், பஞ்சவர்ணம், மஞ்சள் ருமானி, ரத்னா, அமரபாளி, சிந்து, கல்நீலம் உள்ளிட்ட 220 மரங்கள் உள்ளன.
இதில், ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 6 முதல் 8 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இந்த ரகங்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
நிகழாண்டில், பருவநிலை மாற்றம், பருவம் தவறிப் பெய்த மழையால் மாங்காய்களில் கருப்பு நிறப் புள்ளிகள் உள்ளன. இருப்பினும், இயற்கை முறையில் விளைந்த பழங்கள் என்பதால் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.