வணிகம்

பெரிய பொருளாதார சக்தியாக உயர இந்தியாவுக்கு தகுதி இருக்கிறது: ஷெரில் சாண்ட்பெர்க்

செய்திப்பிரிவு

வளர்ந்து வரும் நாடான இந்தியா உலகின் பெரிய பொருளாதார சக்தியாக உயர தகுதி இருக்கிறது என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சி.ஒ.ஒ) ஷெரில் சாண்ட்பெர்க் (Sheryl Sandberg) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

2 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்புள்ள இந்தியா புதிய வேலைகளை உருவாக்கி வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்றார். இதற்கு சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பெருமளவில் உதவி புரியும் என்றார். புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான் வளர்ந்த நாடான அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளின் பிரச்சி னையாக இருக்கிறது.

பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள்தான் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும் வளர்ச்சிக்கான வழி தொழில்முனைவுதான் என்று தெரிவித்தார்.

தனிநபர்கள் வியாபாரத்தை உருவாக்கி, பலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்தியாவைப் பொருத்த வரையில் சிறு, நடுத்தர நிறுவனங்கள் பலமாக இருக்கின்றன. மேலும் இணைய வசதி இந்த நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இணையம் மூலம் மக்களை இணைப்பதுடன் வாடிக்கையாளர்களையும் கவர் கிறார்கள். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்

இந்திய ஜி.டி.பி.யில் இந்த நிறுவனங்களின் பங்கு 8 சதவீத அளவில் இருக்கிறது. மேலும் உற்பத்தி துறையில் 45 சதவீத பங்கும், ஏற்றுமதியில் 40 சதவீத பங்கும் இவர்கள் வசம் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் 5.95 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்றன.

மேலும் இந்தியாவின் வளர்ச்சியில் பேஸ்புக் தனது பங்களிப்பைச் செலுத்தும். உலகம் முழுக்க 3 கோடி சிறு நிறுவனங்கள் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் 9 லட்சம் நிறுவனங்களுக்கு பேஸ்புக் பக்கம் இருக்கிறது. இந்தியா இப்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. சமூக வலைதளங்கள் அவர்களின் தினசரி அங்கமாக மாறி வருகிறது. மேலும், சிறு நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சிக்கு பேஸ்புக் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT