புதுடெல்லி: ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான ரோஸ்நெப்ட் இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அறிகுறியாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) முன்னாள் இயக்குநரை தனது குழுவில் அந்த நிறுவனம் இணைத்துக் கொண்டுள்ளது.
ஐஓசி நிறுவனத்தில் வர்த்தக மேம்பாட்டு இயக்குநராக பணியாற்றி கடந்த 2021-ம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஜி.கே.சதீஷ் ரோஸ்நெப்ட்டின் 11 இயக்குநர்கள் அடங்கிய குழுவில் நியமிக்கப்பட்ட மூன்று புதிய முகங்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். இதன் மூலம், ரோஸ்நெப்ட் இயக்குநர் குழுவில் இடம்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ரஷ்யாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வயலில் ரோஸ்நெப்ட், ஐஓசி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஐஓசி மற்றும் இந்தியாவில் உள்ள பிற நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் விற்பனையை ரோஸ்நெப்ட் மேற்கொண்டு வருகிறது.குஜராத் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான நாப்தாவையும் ரோஸ்நெப்ட் வழங்கி வருகிறது.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) இந்திய நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய அதிக ஒப்பந்தங்களைப் பெற்று வரும் நிலையில், ரோஸ்நெப்ட்டின் இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யா ஒரு நாளைக்கு சுமார் 20 லட்சம் பீப்பாய் அல்லது ஆண்டுக்கு 100 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்திய நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.