புதுடெல்லி: ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 11-ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி தொடர்பாக முடிவெடுக்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரையை அமைச்சகர்கள் குழு உருவாக்கியுள்ளது. அதன்படி, இம்மூன்றுக்கும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ஆன்லைன் கேமிங்களுக்கு 18 சதவீதமும் குதிரைப்பந்தயம் மற்றும் கேசினோவுக்கு 28 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இம்மூன்றுக்கும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இவற்றின் மூலமான மொத்த வருவாய்க்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதா அல்லது இவ்விளையாட்டுகளை ஒருங்கிணைக்கும் தளங்கள் வசூலிக்கும் கட்டணத்துக்கு அல்லது இவ்விளையாட்டுகள் மீது கட்டப்படும் பந்தயத் தொகைக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதா என்பது தொடர்பாக அமைச்சகர்கள் குழுவில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
மாநிலங்கள் கோரிக்கை: மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் தமிழ்நாடு, தெலங்கானா, மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், கோவா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் அமைச்சகள் இடம்பெற்றுள்ளனர்.
ஆன்லைன் கேமிங்களுக்கு அதன் பந்தயத் தொகைக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் பரிந்துரைத்துள்ளன. குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பரிந்துரைத்துள்ளது. இவற்றை ஒருங்கிணைக்கும் தளத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க கோவாபரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.