புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கியில் முறைகேடாக கடன்பெற்ற வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீடியோகான் நிறுவனத்தின் நிறுவனர் வேணுகோபால் தூத்தை சிபிஐ கைது செய்தது.
ஆனால், அவருக்கு மும்பை நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இம்மனு தொடர்பாக வேணுகோபால் தூத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2012-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்த சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கினார். இதை வீடியோகான் நிறுவனம் முறையாக திருப்பிச் செலுத்தாத நிலையில் அது வாராக் கடனாக மாறியது. இந்நிலையில், சந்தா கோச்சார் கணவர் தீபக் கோச்சாருக்கும் வேணுகோபால் தூத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், விதிகளை மீறி சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சூழலில் 2018-ம் ஆண்டுசந்தா கோச்சார் சிஇஓ பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார்.
இவ்வழக்குத் தொடர்பாக அமலாக்கத் துறையும் சிபிஐயும் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.