திருப்புவனத்தில் மொத்த வியாபாரிகள் கிடங்கில் தேங்கியுள்ள தேங்காய்கள். 
வணிகம்

திருப்புவனத்தில் வரத்து அதிகரிப்பால் 25 லட்சம் தேங்காய் தேக்கம்: விலை சரிவால் தென்னை விவசாயிகள் வேதனை

இ.ஜெகநாதன்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வரத்து அதிகரிப்பால் மொத்த வியாபாரிகளிடம் 25 லட்சம் தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால், விலை சரிவு ஏற்பட்டதால் தென்னை விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

திருப்புவனம் பகுதியில் அதிகளவில் தென்னைகள் உள்ளன. தேங்காய் நெற்றுகளை விவசாயிகளிடம் இருந்து அங்குள்ள மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். பின்னர் மட்டையை உரித்து தேங்காய்களை தமிழகம் மட்டுமின்றி குஜராத், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தாண்டு தமிழகம் முழுவதும் தேங்காய் விளைச்சல் அதிகரித்தது.

இதனால் விலை சரிந்தது. கடந்த ஆண்டு ரூ.9-க்கு கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய் நெற்றை, தற்போது ரூ.5-க்கு விவசாயிகளிடம் இருந்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தென்னை விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும், வரத்து அதிகரிப்பால், 25 லட்சம் தேங்காய்கள் தேக்கமடைந்தததால் மொத்த வியாபாரிகளும் கவலை அடைந்தனர்.

இது குறித்து மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தென்னை பராமரிப்பு, உரம் உள்ளிட்ட செலவுகளுக்காக முன்கூட்டியே விவசாயிகளுக்குப் பணம் கொடுத்துவிடுவோம். அவர்களும் ஒரு மரத்துக்கு ரூ.22 கூலி கொடுத்து தேங்காய் நெற்றுகளைப் பறித்துக் கொடுப்பர். ஆனால், இந்தாண்டு விளைச்சல் அதிகரிப்பால் விலை கடுமையாக சரிந்தது.

இதனால் விவசாயிகளிடம் ஒரு நெற்றை ரூ.5-க்கு கொள்முதல் செய்கிறோம். அவர்கள் செலவழித்த பணத்தைக்கூட எடுக்க முடியவில்லை. அதேபோல் எங்களுக்கும் விலை குறைந்ததால் சிரமம் ஏற்பட்டது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெற்றுகளில் இருந்து மட்டை உரித்து தேங்காய்களை, அனுப்புகிறோம். மட்டை உரிக்கும் கூலி ஒரு காய்க்கு ரூ.1.50 செலவாகிறது.

இதுதவிர வாகன வாடகை தனி. மேலும் கடனுக்கு அனுப்புவதால் வட்டிக்குக்கூட கிடைக்காதநிலை உள்ளது. மேலும், கடந்த காலங்களில் தேங்காய் மட்டைகளை ஆலைகள் விலைக்கு வாங்குவர். தற்போது தேங்காய் மட்டைகளை எடுத்துச் செல்ல ஆளில்லை. இதனால், நாங்கள் வாகன வாடகை கொடுத்து ஆலைகளுக்கு அனுப்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT