கோவையில் உள்ள நகை பட்டறையில் தங்க நகை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பொற்கொல்லர்கள் | படம்: ஜெ.மனோகரன் 
வணிகம்

நகை உற்பத்தியில் சாதனை படைத்து வரும் கோவை!

இல.ராஜகோபால்

கோவை: இந்தியாவில் தங்க நகை தொழிலில் சிறந்து விளங்கும் நகரங்கள் பட்டியலில்முதல் இரண்டு இடங்களில் முறையே மும்பை, கொல்கத்தா உள்ளன. மூன்றாம் இடத்தில் கோவை உள்ளது. நாட்டின் மொத்த தங்க நகை ஏற்றுமதியில் கோவை மாநகரம் 6 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.

முதலீடு செய்து வர்த்தகம் செய்பவர்கள் 3 ஆயிரம் பேர், உதிரிபாகங்கள் தயாரிப்பவர்கள் 10 ஆயிரம் பேர், தங்கத்தை வாங்கி நகை செய்து தரும் பட்டறை தொழிலில்(பொற்கொல்லர்கள்) 45 ஆயிரம் பேர் என நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் கோவையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கரோனா தொற்று பரவலுக்கு முன் தினமும் சராசரியாக 100 கிலோ மற்றும் அதற்கு மேல் எடையிலான தங்க நகை வர்த்தகம் நடைபெற்றது. தற்போது தினமும் 60 முதல் அதிகபட்சமாக 80 கிலோ வரை வர்த்தகம் நடைபெறுகிறது.

கலைநயமிக்க நகைகள் தயாரிப்பில் கோவை தொடர்ந்து தனக்கான இடத்தை தக்கவைப்பது மட்டுமின்றி, புதுப்புது டிசைன்களில் பலவகையான தங்க நகைகள் தொடர்ந்து தயாரிக்கப்படுகின்றன.

கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.முத்துவெங்கட்ராமன் கூறும்போது, “கோவையில் 700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்க நகை தொழில் இருந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் நகைகள் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவையில்தயாரிக்கப்படும் நகைகளுக்கென வெளிநாடுகளில் தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் பழங்கால நகைகளான ‘ஆன்டிக்’ வகை நகைகளுக்கு கொங்கு மண்டல மாவட்டங்களில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

கோவையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக கடைகளில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகள்

மாறி வரும் ரசனைக்கேற்ப வாடிக்கை யாளர்களை கவரும் வகையில் புதுவகை டிசைன்களில் நகைகள் தயாரிக்கப்படுகின்றன.

தங்கத்தின் மீது விதிக்கப்படும் 3 சதவீத ஜிஎஸ்டி வரியை 1.5 சதவீதமாகவும், இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைத்தால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.5 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் சிறந்த பலன் தரும். கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள கோவை மட்டுமின்றி இந்திய மக்களிடம் சேமிப்பில் இருந்த தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் பெரிதும் உதவின.

தற்போது விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் தங்க நகை தயாரிப்பு தொழிலில் உள்ள போதும் திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கும் தங்க நகைகள் முக்கிய பங்கு வகிப்பதால் அதன் மவுசு குறையப்போவதில்லை” என்றார்.

SCROLL FOR NEXT