புதுடெல்லி: வரும் 2025-ம் ஆண்டுக்குள் லாரி ஓட்டுநர்களின் கேபின்களில் ஏ.சி. வசதி செய்து தரப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
லாரி ஓட்டுநர்கள் தொடர்ச்சியாக 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்வதால் அவர்களுக்கு உடல்சோர்வு ஏற்படுகிறது. அவர்களுக்கு போதிய ஓய்வும் கிடைப்பதில்லை. எனவே, லாரிகள் விபத்துக்குள்ளாகின்றன. இந்நிலையில் லாரி கேபின்களில் ஏ.சி. வசதி செய்யப்படுவதன் மூலம் அவர்களுக்கு வசதியான சூழல் உருவாகும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், ஓட்டுநர்களை கவுரவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள ‘தேஷ் சாலக்’ என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
விழாவில் அவர் பேசியதாவது: போக்குவரத்து துறையில் ஓட்டுநர்களின் பங்கு மிகப் பெரியதாக உள்ளது. வளர்ந்து வரும் உலகப் பொருளாதாரச் சூழலில் போக்குவரத்து ஒரு முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வரும் ஓட்டுநர்களின் பணி நிலை மற்றும் அவர்களின் மனநிலையை கவனத்தில் கொள்வது தேவையான ஒன்றாக உள்ளது. அவர்கள் அதிகப்படியான வெப்ப நிலையில் பணிபுரிகின்றனர். எனவே, லாரி ஓட்டுநர்களுக்கு குளிரூட்டப்பட்ட கேபின்கள் (ஏ.சி. கேபின்) அவசியமான ஒன்றாக மாறி உள்ளது.
நான் இங்கு வருவதற்கு முன்னதாக இனி லாரிகளில் உள்ள ஓட்டுநர் கேபின் ஏசியால் குளிரூட்டப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டு வந்துள்ளேன். அனைத்து லாரிகளிலும் 2025-ம் ஆண்டுக்குள் ஏ.சி. கேபின்கள் இருக்கும். இவ்வாறு கட்கரி பேசினார்.