பழநி அருகே கோம்பைபட்டியில் அறுவடை செய்த மக்காச்சோளத்தை மூட்டையிடும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள். 
வணிகம்

பழநி பகுதியில் 100 கிலோ மக்காச்சோளம் ரூ.2,090 - விலை சரிவால் விவசாயிகள் கவலை

செய்திப்பிரிவு

பழநி: பழநி பகுதியில் வரத்து அதிகரிப்பால் மக்காச்சோளம் விலை வீழ்ச்சிஅடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

பழநி கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, ஆயக்குடி, சத்திரபட்டி, நெய்க்காரபட்டி, காவலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், மக்காச்சோள சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இந்தாண்டு போதுமான மழைப் பெய்ததாலும், குறைந்த செலவு, அதிக லாபம் கிடைப்பதாலும் விவசாயிகள் வழக்கத்தை விட கூடுதலாக மக்காச்சோளம் பயிரிட்டனர். தற்போது மக்காச்சோள அறுவடையில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு 100 கிலோ மூட்டை ரூ.2,500 முதல் ரூ.2,700 வரை விற்பனையானது. வியாபாரிகள் விளை நிலங்களுக்கே நேரடியாக வந்து மக்காச் சோளத்தை வாங்கிச் சென்றனர். ஆனால், இந்தாண்டு விவசாயிகள் பலரும் ஒரே சமயத்தில் மக்காச்சோளம் பயிரிட்டதால் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தற்போது 100 கிலோ மூட்டை ரூ.2,000 முதல் ரூ.2,090 வரை விற்கிறது. மூட்டைக்கு ரூ.500 வரை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இது குறித்து கோம்பைபட்டி விவசாயி துரைச்சாமி கூறுகையில், பழநி பகுதியில் மழை அதிகமாக பெய்ததால் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் அதிகளவில் நடவு செய்தனர். தற்போது அறுவடை நேரம் என்பதால் வரத்து அதிகரித்து விலை சரிவடைந்துள்ளது. விவசாயிகளுக்கு ஏமாற்றமே, என்றார்.

SCROLL FOR NEXT