சென்னை: பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் சார்பில் 14 புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாபா ராம்தேவ் இவற்றை அறிமுகம் செய்துவைத்தார்.
இதுகுறித்து பதஞ்சலி ஃபுட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் மதிப்பு வாய்ந்த பொருட்களை வழங்கும் முயற்சியின்படி நியூட்ராசூட்டிகல்ஸ், ஹெல்த் பிஸ்கெட், நியூட்ரேலா தினை அடிப்படையிலான உணவு, உலர் பழங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மூலிகை தயாரிப்புகளில் அதன் நிபுணத்துவம், இந்திய நுகர்வோர் சந்தை பற்றிய ஆழமான புரிதலை மூலதனமாகக் கொண்டு பதஞ்சலி ஃபுட்ஸ் பல்வேறு பிரிவுகளில் 14 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான ஊட்டச்சத்து தேவை அதிகரித்து வருவதால் 2028-ம் ஆண்டுக்குள் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.8 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு விளையாட்டு வீரர்களுக்கான 6 புதிய ஊட்டச்சத்து மாவுகளை பதஞ்சலி ஃபுட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. பாதுகாப்பான மற்றும் செயல்திறன் சார்ந்த உண்மையான, இயற்கை விளையாட்டு ஊட்டச்சத்து தயாரிப்புகளின் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யும் வகையில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஹரித்வாரில் உள்ள இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 100 சதவீதம் பாதுகாப்பான, பலன் தரக்கூடிய இந்த ஊட்டச்சத்து மாவு, பிஸ்கெட், உலர் பழ வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.