கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்படாமல் உள்ள பங்கஜா (என்.டி.சி) நூற்பாலை. (கோப்புப் படம்) 
வணிகம்

3 ஆண்டுகளுக்கு மேல் உற்பத்தி பணிகள் நிறுத்தம் - ‘என்டிசி’ நூற்பாலைகளில் துருப்பிடிக்கும் இயந்திரங்கள்

இல.ராஜகோபால்

கோவை: கட்டமைப்பு வசதிகள், தொழிலாளர்கள் என அனைத்து வசதிகள் இருந்தும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தில் என்டிசி நூற்பாலைகள் முடங்கிக் கிடக்கின்றன. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் துருப்பிடித்து ஸ்கிராப்பாக மாறி வருகின்றன.

கடந்த 1974-ல் தேசிய பஞ்சாலைக் கழகம் (என்டிசி) அமைக்கப்பட்டு 123 மில்கள் இணைக்கப்பட்டன. லாப நோக்கம் இல்லாமல் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டது. 123 என்டிசி நாற்பாலைகளில் தமிழகத்தில் 15 நுாற்பாலைகள் செயல்பட்டு வந்தன. நாடு முழுவதும் ரயில்வே, காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளுக்கு ஆடைகள் விநியோகம் செய்யும் பணி வாய்ப்புகள் கிடைத்து அதன்பேரில் நூல் தயாரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. நாளடைவில் படிப்படியாக 100 நுாற்பாலைகள் மூடப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளாக 23 நுாற்பாலைகள் மட்டுமே நாடு முழுவதும் செயல்பட்டு வந்தன.

கரோனா நோய்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல், 23 நூற்பாலைகளிலும் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வரை மீண்டும் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இதனால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் துருப்பிடித்து இரும்பு கழிவுகளாக மாறி வருகின்றன.

இதுதொடர்பாக இந்திய தொழிலாளர் சம்மேளனம் (எச்எம்எஸ்) மாநில செயலாளர் டி.எஸ்.ராஜாமணி, கோவை ஜில்லா நுாற்பாலை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கூறியதாவது:

தேசிய அளவில் உள்ள 23 நுாற்பாலைகளில் தமிழகத்தில் ஏழு நுாற்பாலைகள் அமைந்துள்ளன. கோவையில் ரங்கவிலாஸ், முருகன், பங்கஜா, கோவை ஸ்பின்னிங் அண்ட் வீவிங், கம்போடியா, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் காளீஸ்வரா (பி), ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியில் பயோனீர் ஸ்பின்னர்ஸ் உள்ளிட்டவையாகும். நிரந்தர மற்றும் தற்காலிக பிரிவில் மொத்தம் 5,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

கரோனா நோய்தொற்று பரவல் காலத்தில் நிறுத்தப்பட்ட நூல் உற்பத்தி பணிகள் இன்று வரை மீண்டும் தொடங்கப் படவில்லை. தொழிலாளர்களுக்கு பாதி மாத ஊதியம் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இடையே சில மாதங்கள் பாதி ஊதியம் வழங்குவதும் நிறுத்தப்பட்டது. பணப்பலன்கள் நிலுவை வைக்கப்பட்டன.

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களை அடுத்து தொழிலாளர்களுக்கு நிலுவை வைக்கப்பட்ட பல மாத ஊதியம் மற்றும் பணப்பலன்கள் சிறிதளவு வழங்கப்பட்டது. இருப்பினும் தொழிலாளர்களின் நலனுக்கான பிஎப், பென்ஷன் திட்டங்களுக்கு தொகை சரிவர செலுத்தப்படுவதில்லை.

கட்டமைப்பு வசதி, தொழிலாளர்கள் என அனைத்தும் இருந்த போதும் என்டிசி நூற்பாலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர், செயலர், என்டிசி தலைமை அலுவலகத்தின் உயரதிகாரிகள் என அனைவரையும் சந்தித்து என்டிசி நூற்பாலைகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி உள்ளோம். மூன்றாண்டுகள் கடந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைத்து தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடி விரைவில் கூட்டம் நடத்தி மத்திய அரசின் இறுதி முடிவு என்ன என்பதை தெரிந்து கொள்வதுடன் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT