கோவை: நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளின் போது வங்கி அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், ரொக்கம் செலுத்தியதற்கான குறுஞ் செய்தி அனுப்பப்படும் போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டு குறித்த தகவலையும் இணைத்து அனுப்ப வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்ற வாடிக்கையாளர் கூறும்போது, ‘‘வங்கிகளில் தனி நபர் ரொக்கம் செலுத்தும் போது ரூபாய் நோட்டுகளின் விவரங்களை எழுதி தருகின்றனர். சிறிது நேரத்துக்கு பின் வங்கியில் இருந்து அனுப்பப்படும் குறுந் செய்தியில் செலுத்தப்பட்ட ரொக்கம் குறித்த தகவல் மட்டுமே அனுப்பப்படுகிறது. செப்.30-ம் தேதி வரை தனிநபர் இரண்டாயிரம் நோட்டு செலுத்தியிருந்தால் அது குறித்த விவரத்தை இணைத்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் யாரேனும் முறைகேடாக இரண்டாயிரம் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்க முடியும்’’என்றார்.
சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயமுத்தூர் தலைவர் ஜெயராமன் கூறும்போது, ‘‘ஏற்கெனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. செப்டம்பர் 30-ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் ரொக்கம் செலுத்தும் போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை செலுத்தியிருந்தால் அது குறித்த விவரத்தை குறுஞ்செய்தியில் இணைத்து வழங்க ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி நிர்வாகங்கள் ஆவண செய்ய வேண்டும்’’என்றார்.
கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ராஜன் கூறும்போது, ‘‘நாட்டில் மொத்தம் ரூ.30 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளது. இதில் ரூ.7 லட்சம் கோடி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாகும். வங்கிகளுக்கு இதுவரை ரூ.3.5 லட்சம் கோடி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப வந்துள்ளன. மீதம் ரூ.3.5 லட்சம் கோடி நோட்டுகள் உள்ளன.
செப்.30-ம் தேதி வரை நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர அதற்கு பின் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட வில்லை. எனவே, முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு குறைவு. குறுஞ் செய்தியில் நோட்டுகள் விவரங்களும் சேர்த்து அனுப்புவது குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவு எடுக்க வேண்டும்’’என்றார்.