வணிகம்

நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்

செய்திப்பிரிவு

இதுவரை ஸ்டார்ட்-அப் தொடர்பான பலவிதமான விஷயங்களைப் பற்றிப் பார்த்தோம். இவ்வாரம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் குறித்துப் பார்ப்போம்.

பணப் பிரச்சினை

உலகெங்கிலும் பல ஸ்டார்ட்-அப்-கள் தோல்வி அடைவதற்கு முக்கியமான காரணம் பணப் பற்றாக்குறைதான். நிறுவனங்களை ஆரம்பிப்பவர்கள் ஆரம்ப காலத்தில் தங்களது விற்பனை மற்றும் லாபம் மிக அதிகமாக இருக்கும் எனக் கணக்கிட்டுவிடுவார்கள். உண்மை என்னவென்றால், பல தொழில்கள் பிரேக்-ஈவன் ஆவதற்கு குறைந்தது 3 வருடங்களாவது ஆகிவிடும். ஆகவே நீங்கள் புதிய தொழில் ஆரம்பிக்கப் போடும் திட்டத்தில் ஆரம்பச் செலவுகள் போக, அடுத்த 3 வருடங்களுக்கு ஆகும் நடப்புச் செலவுகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு, நிதியை திரட்டுங்கள்.

நாம் ஏற்கெனவே கண்டதுபோல், ஆரம்ப காலங்களில் சிக்கனமாக செலவழியுங்கள். உங்கள் பங்கு குறைந்தாலும் பரவாயில்லை என்று, பணம் தேவைப்படும்பொழுது நல்ல கவர்ச்சிகரமான விலையில் உங்கள் நிறுவனப் பங்குகளை விற்று, புதிய முதலீட்டாளர்களை உள்ளே கொண்டு வாருங்கள். பற்றாக்குறை இல்லாமல் பணம் இருக்கும்பொழுது, தொழில் பாதிப்படையாமல் இருக்கும்!

அர்ப்பணிப்பு

நீங்கள் செய்யும் பிற செயல்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே மனதுடன் தொழிலில் உங்களை நீங்களே முழுக்க முழுக்க ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

இன்றும் பலர், தொழிலை ஆரம்பித்துவிட்டு நண்பர்களுடன் சுத்தப் போய்விடுகிறார்கள். அவ்வாறு அரை மனதுடன் தொழிலில் ஈடுபடும் பொழுது, வெற்றி என்பது உறுதி அல்ல. சமீபத்தில் ஒரு டாக்டரை சந்தித்தேன். அவரின் சம்பாத்தியம் அவரது குடும்ப செலவிற்கு போதவில்லை என்றார். அவர் செய்யும் தொழிலோ மருத்துவம். ஆனால் சற்று ஆழ்ந்து பேசிய பிறகுதான் தெரிந்தது அவரின் ஆசையெல்லாம் சினிமா நடிகர் ஆக வேண்டும் என்று. எனக்கு அவரது பிரச்சினை புரிந்துவிட்டது. அவரது உடல் மருத்துவத்திலும், உயிர் சினிமாவிலும் இருந்தது.

அவ்வாறு இருப்பவர்கள் எந்தத் தொழிலிலும் சிறக்க முடியாது. பிறகு அவருக்கு வேண்டிய ஆலோசனைகளைக் கூறி அனுப்பி வைத்தேன். ஆகவே தொழிலில் உங்களுக்கு அர்ப்பணிப்பு இல்லா விட்டால், வெற்றி அடைவது கடினம். முக்கியமாக உங்களின் ஆற்றலையெல்லாம் ஒருமுகப்படுத்தி, தொழிலில் ஈடுபடுத்துங்கள். வெற்றி நிச்சயம்!

வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இரண்டையும் சமாளிப்பது

தொழில் ஆரம்பிக்கும் காலத்தில், பலரும் அலுவலகத்தில் முழுக்க முழுக்க நேரத்தைச் செலவிடுவார்கள். அதிகாலையில் எழுந்து வேலைக்குச் சென்று விடுவார்கள். இரவில் வருவதோ 11 மணி அல்லது நள்ளிரவு ஆகிவிடும். குழந்தைகளுக்கு அப்பா வீட்டில் வாழ்வது கூடத் தெரியாது. மனைவி வீட்டில் பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

செலவழிப்பதற்கு போதுமான பணம்கூட இருக்காது. குடும்பப் பிரச்சினை சிறிது சிறிதாக தொழிலுக்கும் வந்துவிடும். சில காலங்களுக்குப் பிறகு குடும்பம், தொழில் ஆகிய இரண்டையும் இழக்குமாறு ஆகிவிடும். ஆகவே குடும்பம், தொழில் ஆகிய இரண்டையும் பேலன்ஸ் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். குடும்பத்திற்கு என்று தனியாக நேரத்தை ஒதுக்குங்கள். வாரத்திற்கு ஒரு நாளாவது குடும்பத்துடன் முழுவதுமாக செலவழியுங்கள்.

குடும்பத்திற்குத் தேவையான பணத்தை, தொழிலிற்கு திட்டமிடும்பொழுதே சேர்த்து திட்ட மிட்டுக் கொள்ளுங்கள். தொழில் தொடங்கும் பொழுது குடும்பத்தினரையும் நம்பிக்கை வட்டத்திற்குள் கொண்டு வந்து ஆரம்பிப்பது சாலச் சிறந்தது.

பொருட்களின் விலையை நிர்ணயிப்பது

தொழில் ஆரம்பிப்பவர்களைக் குழப்பும் மற்றுமொரு பகுதி என்று பார்த்தால் விலையை நிர்ணயம் செய்வதுதான். தங்களது பொருட்களை அல்லது சேவையை எவ்விலையில் விற்பது? பெரிய நிறுவனங்கள் குறைந்த விலையில் வாங்கி, அதிகமான விலைக்கு விற்பார்கள்; அல்லது மிகவும் குறைவான விலைக்குக்கூட விற்பார்கள்.

மிகக் குறைவான விலைக்கு விற்கும்பொழுது அவர்களுக்கு அந்தப் பொருளில் இருந்து லாபம்கூட இல்லாமல் இருக்கலாம். பெரிய நிறுவனங்கள் செய்யும் செயல்களையெல்லாம் வைத்து, சிறிய நிறுவனங்கள் முடிவெடுக்க முடியாது. சிறிய நிறுவனங்கள் தங்களின் பலன் என்ன என்பதை கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு பக்கத்தில் இருக்கும் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலிருந்து பொருட்களை டோர் டெலிவரி செய்ய மாட்டார்கள். ஆனால், உங்களால் செய்ய முடியும்.

பெரிய நிறுவனம் அதிகாலையில் கடையைத் திறக்க மாட்டார்கள்; அது உங்களால் முடியும். பொருட்களை கேட்டு வருபவர்களுக்கு, டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் எடுத்துக் கொடுக்க ஆள் இருக்க மாட்டார்கள். ஆனால் உங்களால் அதை துரிதமாகச் செய்ய முடியும். இதுபோல் அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆகவே உங்களின் பலத்தை அறிந்து செயல்படுங்கள்; உங்கள் விலையையும் நிர்ணயம் செய்யுங்கள்.

உங்களின் தொழிலாளர் செலவு, வாடகை மற்றும் மின்சாரச் செலவு போன்றவை குறைவு என்பதால், உங்களால் பொருட்களை சற்று குறைவான விலைக்கு விற்க முடியும். இப்பிரச்சினை குறித்தும் இதுபோன்ற பிற பிரச்சினைகள் குறித்தும் வரும் வாரத்தில் காண்போம்.

prakala@gmail.com

SCROLL FOR NEXT