கோவை: புதுமையான யோசனைகளால் பொருட்களை தயாரித்து சந்தையில் ரூ.100 கோடிக்கு மேல் வணிகம் செய்யும் வகையில் அந்நிறுவனத்தை வழி நடத்தி செல்வதே ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனம் என கொடிசியா சார்பில் நடத்தப்பட்ட பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.
‘கொடிசியா’ ராணுவ தளவாட உற்பத்தி மையம் ( சிடிஐஐசி ) சார்பில், தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிலரங்கு அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. சென்னை ‘கிஸ் ப்ளோ’ தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தம் பேசியதாவது:
‘ஸ்டார்ட் அப்’ என்பதை பலர் தவறாக புரிந்துள்ளனர். புதுமையான யோசனைகளால் பொருட்களை தயாரித்து சந்தையில் ரூ.100 கோடிக்கு மேல் வணிகம் செய்யும் வகையில் அந்நிறுவனத்தை வழிநடத்தி செல்வதே ‘ஸ்டார்ட் அப்’ என்பதாகும். இதற்கு பல கட்டங்களை தொழில்முனைவோர் கடந்து செல்ல வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இன்று சந்தையில் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்துக் கொண்டாலும் அதிகபட்சமாக 7 நிறுவனங்களின் பெயர்களைத்தான் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். மக்கள் மனதில் முதல் 4 இடத்துக்குள் தங்களின் பொருட்களை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கம் கொண்டு செயல்பட்டால் தொழில் முனைவோர் சாதனை படைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.