கோப்புப்படம் 
வணிகம்

தொடர்ந்து 2-வது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 6.5 சதவீதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு

செய்திப்பிரிவு

மும்பை: ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றும் முந்தை அளவான 6.5 சதவீதத்திலேயே அது தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இருமாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவு எடுப்பது வழக்கம். நேற்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. ரெப்போ விகிதத்தை முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடர இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இந்நிலையில், தற்போது ரெப்போ விகிதம் உயர்த்தப்படாத நிலையில் இத்துறைகள் ஊக்கம்பெறும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2022-23 நிதி ஆண்டில் மட்டும் இந்தியாவில் ரிசர்வ் வங்கி 2.5 சதவீதம் அளவில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் இவ்வாண்டு பிப்ரவரியில் 6.5 சதவீதமாக உயர்ந்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. பிப்ரவரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவான 6.5 சதவீதத்திலேயே ரெப்போ விகிதம் தொடரும் என்று அறிவித்தது. தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் முந்தைய அளவிலேயே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. இந்தச் சூழலில் ரெப்போ விகிதத்தை முந்தைய அளவிலேயே தொடர முடிவு செய்துள்ளோம். பணவீக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதை 4 சதவீதத்துக்குள் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

2022-23 நிதி ஆண்டில் நாட்டின் ஜிடிபி 7.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஜிடிபி 6.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம். முதல் காலாண்டில் 8 சதவீதம், 2-ம் காலாண்டில் 6.5 சதவீதம், 3-ம் காலாண்டில் 6 சதவீதம், 4-ம்காலாண்டில் 5.7 சதவீதம் என்ற அளவில் ஜிடிபி வளர்ச்சி இருக்கும். பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்கள், அந்த நாடுகளில் எளிதில் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் ரூபே கடன் அட்டைகளை விநியோகிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கிஉள்ளது.

மேலும், வாராக் கடன்களுக்கு தீர்வுகாணும் தொழில்நுட்ப வசதி கூட்டுறவு வங்கிகளுக்கு விரைவிலேயே வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது இந்த வசதி வர்த்தக வங்கிகளுக்கும் குறிப்பிட்ட சில வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கும் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT