மும்பை: ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை. இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் நிதிக் கொள்கை அறிவிப்பு நிகழ்ச்சியில் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ரிசர்வ் வங்கியின் செலாவணி நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பு மே 19-ல் வெளியிடப்பட்டது. இந்த நோட்டுகளை மே 23-ம் தேதி முதல் செப்டம்பர் 30, 2023 வரை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் ரூ.20,000 மதிப்பிலான 2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்வதில் மக்கள் பீதியடையவோ, அவசரம் காட்டவோ தேவையில்லை.
மார்ச் 31,2023 நிலவரப்படி ரூ.3.20 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு, இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளது. ஏறக்குறைய 50 சதவீத 2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டு விட்டன. இந்த நோட்டுகளில் 85 சதவீதம் வங்கிக் கணக்குகளில் டெபாசிட்டாக திரும்பியுள்ளது. இது,ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் உள்ளது.
ரூ.1,000 நோட்டு அறிமுகமில்லை
500 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் ஊகத்தின் அடிப்படையிலானது. அதுபோன்ற எந்த திட்டமும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை. அதேபோன்று, 1,000 ரூபாய் அறிமுகம் செய்யும் யோசனையும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை. எனவே இதுபோன்ற ஊகத் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
எதிர்பார்க்கப்பட்டபடி செப்டம்பர் 30-க்குள் ரூ.2,000 கரன்சி நோட்டுகளில் பெரும்பாலானவை வங்கியில் திரும்பச் செலுத்தப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.