வணிகம்

மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க காட்மா கோரிக்கை

செய்திப்பிரிவு

கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் சி.சிவக்குமார் தமிழக முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தால் கடந்த ஆண்டு மின் உபயோக கட்டணம், உச்சபட்ச நேர மின் பயன்பாட்டு கட்டணம், நிலைக்கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் தொழிற்சாலைகளுக்கான மின் உபயோக கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தப்படும் என அறிவிப்பு வந்துள்ளது. ஏற்கெனவே, ஆட்கள் கூலி, இட வாடகை, போக்குவரத்து ஆகியவற்றுக்கான கட்டணங்கள், தொழில் முனைவோரால் சமாளிக்க முடியாத அளவுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் மின் கட்டணம் தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு, தொழிலாளர்களின் வேலை வாய்ப்பையும் குறைக்கும். எனவே, தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் மின் கட்டணம், கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணம் மற்றும் உச்சபட்ச நேர மின்பயன்பாட்டு கட்டணம் ஆகியவற்றிலிருந்து குறுந் தொழில் முனைவோருக்கு முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT