நடுத்தர மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற நகை சேமிப்பு திட்டத்தை பல ஜூவல்லரி நிறுவனங்கள் நிறுத்தி இருக்கின்றன. புதிய கம்பெனி சட்டத்தில் இருக்கும் சில விதிமுறைகள் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
பல கடைகளில் மாதாந்திர நகை சீட்டில் சேர்ந்த பொது மக்களுக்கு அவர்கள் கட்டிய பணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
என்ன காரணம்?
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி புதிய கம்பெனி சட்டம் அமலுக்கு வந்தது. இதில் தங்க சேமிப்பு திட்டங்கள் பொது டெபாசிட்டாக கருதப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன்படி, இந்த சீட்டை நடத்தி வரும் நிறுவனங்கள் 12 சதவீதத்துக்கு மேல் வட்டி கொடுப்போம் என்று உத்தரவாதம் அளிக்கக் கூடாது. 365 நாட்களுக்கு மேல் ஒரு திட்டத்தை நடத்த கூடாது. ஒரு நிறுவனத்தின் மதிப்பில் (நெட்வொர்த்) 25 சதவீதத்துக்கு மேல் டெபாசிட் வாங்க கூடாது.
இதனால் நாடு முழுவதும் பல நிறுவனங்கள் இந்த திட்டத்தை நிறுத்தி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து வருகின்றன.
சில நிறுவனங்கள் இந்த திட்டத்தை 11 மாதங்களாக குறைத்துவிட்டன.
மொத்தமாக பணம்கொடுத்து நகை வாங்க முடியாது என்பதால் நடுத்தர வர்க்க மக்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தார்கள்.
மேலும் இந்த திட்டத்தில் சேருவதன் மூலம் ஒரு மாத தவணைத் தொகை உள்ளிட்ட பல சலுகைகள் கிடைத்தது. நீண்ட காலம் சேமித்து வாங்கும் போது அதிக அளவு வாங்க முடியும் என பல சலுகைகள் இருந்ததால் நகைக் கடைகளில் மாதச் சீட்டு செலுத்தி வந்தார்கள்.
இப்போது பொது மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் மாதாந்திர நகை சீட்டு செலுத்து தொகை வருடத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தி மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். சாந்தகுமார் கூறியதாவது:
பல நகை கடைகளை வைத்துள்ள பெரிய நிறுவனங்களுக்குப் பொருந்தும் வகையில்தான் இந்தச் சட்டம் உள்ளது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான நகைக்கடைகளில் நகை சீட்டு பணம் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
'' பொது மக்கள் பலர் சிறு சேமிப்பு மூலம் நகைக் கடைகளில் நகை சீட்டில் சேர்ந்தனர். நகை கடைகள் பல 15, 18,20 மாதங்கள் எனச் சீட்டு செலுத்தும் காலம் வைத்து இருந்தனர். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தால் பொது மக்களுக்குத்தான் பாதிப்பு'' என்கிறார் நகை வியாபாரி ஜெயந்திலால் சாலனி.