சென்னை: ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியா முன்னோடியாக இருப்பதற்கு வர்த்தக அமைப்புகள் பெரும் பங்காற்றி வருகின்றன என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறினார்.
சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில், வர்த்தக மேம்பாட்டுத் திட்டம் குறித்த கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னை துறைமுக துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார்.
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ``சரக்குகளைக் கையாள்வதில் சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. இதன்மூலம், வருமானமும் 14 சதவீதம் அதிகரித்துள்ளது'' என்றார்.
கருத்தரங்கை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவர் தனது உரையில், ``போக்குவரத்து கட்டமைப்புகளை நவீனப்படுத்த வேண்டும் என்பது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாக உள்ளது. துறைமுகங்களில் சுற்றுச்சூழல் மாசை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, சரக்குகளைக் கையாள்வதற்கான செலவையும் குறைக்க வேண்டும்.
ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியா முன்னோடியாக இருப்பதற்கு வர்த்தக அமைப்புகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மேலும், இந்த அமைப்புகளின் உதவியின்றி சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் வர்த்தக சாதனை படைக்க முடியாது'' என்றார்.
முன்னதாக, சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கையின் 3துறைமுகங்களை இணைக்கும் வகையில், ‘எம்வி எம்பிரஸ்’ என்ற சர்வதேச பயணிகள் கப்பல் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
2022-23-ம் கல்வியாண்டில் சென்னை துறைமுக பள்ளியில் பயின்று 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 3 மாணவர்களுக்கு அமைச்சர் விருதுகளை வழங்கினார். அத்துடன், துறைமுக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், காமராஜர் துறைமுகத்தின் பொது மேலாளர் சஞ்ஜய் குமார், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் துறைமுக பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.