வணிகம்

தமிழக வேளாண் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தயார் - மதுரையில் வங்கதேச துணை தூதர் ஷெல்லி சாலிஹின் தகவல்

என். சன்னாசி

மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில், இந்தியா - பங்களாதேஷ் வர்த்தக வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமையில் மதுரையில் நடந்தது.

பங்களாதேஷின் துணைத் தூதர் ஷெல்லி சாலிஹின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: மதுரை மிகப்பழமையான தொன்மை நிறைந்த நகரமாக இருப்பதால் பங்களாதேஷ் மக்கள் மதுரைக்கு சுற்றுலா வர விரும்புகின்றனர். மதுரையிலிருந்து சமையல் எண்ணெய், வெங்காயம், சீனி, அரிசி ஆகிய உணவு பொருட்கள் பங்களாதேஷ்க்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் உள்ளன. வேளாண் மற்றும் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த தென் இந்திய தொழில் முனைவோரை பங்களாதேஷ்க்கு வரவேற்கிறோம்.

தமிழகத்தில் வேளாண் சார்ந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்ய தயாராக இருக்கிறோம். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 12 சதவீதம் பங்களாதேஷ்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியா - பங்களாதேஷ்க்கு இடையே ஆண்டுக்கு சராசரியாக 18 பில்லியன் டாலர் வர்த்தகம் நடக்கிறது. இந்தியாவில் இருந்து 5,443 பொருட்கள் ஏற்றுமதியும், பங்களாதேஷில் இருந்து 910 பொருட்கள் இறக்குமதியும் செய்யப்படுகிறது. இந்தியா - பங்களாதேஷ் இடையே 2022 - 23 நிதியாண்டில் 18.66 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது" என்றார்.

நிகழ்ச்சியில் வர்த்தக சங்கச் செயலாளர் செல்வம், துணை தலைவர்கள் இளங்கோவன் ஜீயர் பாபு, பொருளாளர் ஸ்ரீதர் , இணைச் செயலாளர் ராஜீவ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT