கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மநீம தலைவர் கமல் இன்று பிரச்சாரம் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

பிப்.19ம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இதனிடையே, தேர்தலில் அக்கட்சி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வேட்பு மனுக்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவர்களிடம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

இன்று காலை 11 மணி அளவில் சென்னை மந்தைவெளி விசாலாட்சி தோட்டம் பகுதியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

இதனிடையே, இன்று மதியம் 2 மணி அளவில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT