ஒரு நிமிட வாசிப்பு

கரோனா பிடியில் இருந்து மக்கள் விடுபட வேண்டி புதுச்சேரியில் சிவனடியார்கள் பாதயாத்திரை

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட புதுச்சேரியில் வேதபுரீஸ்வரர் கோயிலிருந்து வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் வரை தேவாரம், திருவாசகம் முழங்க சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்கள் பாதயாத்திரையை இன்று நடத்தினர்.

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பல்வேறு சைவ அமைப்புகள், திருவாசக முற்றோதல் குழுக்கள், செந்தமிழ் வேள்விப் பணி செய்யவர்கள், கயிலாய வாத்தியக் குழுக்கள், உழவாரத் திருத்தொண்டினர் போன்றோரை புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார் திருக்கூட்டம் எனும் பெயரில் அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இவ்வமைப்பினர் இன்று கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்கள் விடுபட பாதயாத்திரையை நடத்தினர்.

புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பட்ட யாத்திரை வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் வரை சென்றனர். கொடிய நொற்த்தொற்றில் இருந்து விடுபட நடந்த பாதயாத்திரையில் தேவாரம், திருவாசகங்கள் பாடியப்படி சென்றனர். கயிலாய வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

இது பற்றி சிவனடியார்கள் கூறுகையில், "புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை முக்கிய சாலைகள் வழியாக வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் வரை சென்றடைந்தது. சுமார் 12 கிமீ தொலைவு பாதயாத்திரையில் தொற்று நோய் நீக்கி மக்கள் மகிழ்வுடன் வாழ பிரார்த்தித்தோம்.

அடுத்தக்கட்டமாக குழந்தைகளுக்கு சைவ வகுப்புகள், திருமுறை இசைப்பயிற்சி ஆகியவற்றை இலவசமாக நடத்த முடிவு எடுத்துள்ளோம். நம் சமய முன்னோர்களின் கருத்துக்களையும், அவர்களின் அர்ப்பணிப்புகளையும், சொற்பொழிவாளர்களைக் கொண்டு சொற்பொழிவுகள், நாடகங்கள், இசைக் கச்சேரிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்." என்று சிவனடியார்கள் குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT