புதுச்சேரி: புதுச்சேரி சிறையை தனியாகக் குழு அமைத்து கண்காணிக்க அரசு தயாராக இருக்கிறது என்று அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் கூறியது: "புதுச்சேரியில் கரோனா தொற்றின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாட்களில் தொற்றின் தாக்கம் குறையும் என்று எண்ணுகின்றோம். கரோனா தாக்கத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகள் திறப்பது சம்மந்தமாக பிப்ரவரி முதல் வாரத்தில் முதல்வருடன் கலந்துபேசி உரிய அறிவிப்பை தெரிவிப்போம்.
சிறையில் இருக்கும் குற்றவாளிகளை எங்கள் அரசு தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது. சிறைத் துறையும் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கிறது. சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதனை உடனடியாக அரசு கவனத்தில்கொண்டு, அதற்குரிய ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட கஞ்சா, செல்போன் சிறையில் இருந்து பிடித்துள்ளோம். இதுபோல் தொடர்ந்து சிறைத் துறை, காவல்துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சிறையில் பொருத்தப்பட்டுள்ள ஜாமர் கருவியை நேரடியாக சென்று ஆய்வு செய்ய துறையின் அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர். அதனை ஆய்வு செய்து தேவையான உரிய நடவடிக்கையை அரசு நிச்சயமாக எடுக்கப்படும். சிறைத்துறையை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசு மத்தியில் இருக்கிறது. பொதுமக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது, சிறையில் இருந்தபடி வெளியே குற்றச் சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிப்படையிலும் தொடர்ந்து எங்கள் அரசு அதில் கவனமாக உள்ளது. தேவைப்படும் நேரத்தில் தனியாக குழு அமைத்து கண்காணிக்க அரசு தயாராக இருக்கிறது. குற்றச் செயல் செய்வோருக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.