சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மண்டலம் யானைக்கவுனி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக முதல்வர் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் மண்டலம், வார்டு 57, யானைக்கவுனி பகுதியில் ரூ.32.95 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (19.01.2022) பார்வையிட்டு ஆய்வு செய்து மேம்பாலப் பணிகளை ஜூலை மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.
மேலும், ராயபுரம் மண்டலம், வார்டு 54, திருப்பள்ளி தெருவில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உட்பட பலர் கலந்துகொண்டனர்'' என்று தெரிவித்துள்ளது.