மதுரை : பொங்கல் பண்டிகையையொட்டி, மக்கள் பாதுகாப்புடன் சொந்த ஊர் சென்று வர ஏதுவாக 17,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், "போக்குவரத்து துறையில் கூடுதலாக பணிபுரிந்த 1,19,161 ஊழியர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை முதல்வர் வழங்கியுள்ளார். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர். 3 நாள் மற்றும் முழு ஊரடங்கு முடிந்த பின்னர் மீண்டும் அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, போக்குவரத்து நிலவரம் குறித்து கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பணிமனைகளில் ஆய்வுகள் செய்ய உள்ளேன். பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை விட பொங்கல் பண்டிகை அதிக அளவு மக்கள் பயணம் செய்கின்றனர்.
தமிழர்கள் பண்டிகை என்பதால் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்களை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதில் நமது தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தற்போது பொங்கல் தினத்தையொட்டி, 20,000 பேருந்துகளில் 17,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது" என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.