புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்ட காமராஜர் மணி மண்டபம், 15 ஆண்டு கட்டுமானப் பணிக்கு பிறகு இன்று காணொலி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
புதுச்சேரியில் கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்தபோது கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே ரூ.14 கோடியில் 3.75 ஏக்கரில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து 2009-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக இந்தப் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2014-ம் ஆண்டு ரூ.24 கோடி ஹட்கோ கடனுதவியில் மீண்டும் கட்டுமான பணி தொடங்கியது. அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமி 2-வது முறையாக காமராஜர் மணிமண்டபத்திற்கு அடிக்கடி நாட்டினார்.
இந்த மணிமண்டபத்தில் யூபிஎஸ்சி பயிற்சி மையம், உலக தரம் வாய்ந்த நூலகம், 130 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், 4,417 சதுர அடி தரைத்தளம், காமராஜர் சிலை, அவரது வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி, உள்ளிட்டவை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணி மண்டபத்தை 15 ஆண்டுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் டெல்லியிலிருந்து திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் திறந்து வைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. நூலகம், சென்டாக் சேர்க்கை, கலை நிகழ்வுகள் என இளையோருக்கான பல நல்நிகழ்வுகள் இங்கு பயன்பாட்டுக்கு வரும்" என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.