கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்: அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: கரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே சிறந்தது. அதன் மூலம்தான் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது!

அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துவிட்டு, ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் பாமகவின் நிலைக்கு வலுசேர்த்துள்ளது!

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பரவலால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், நேரடி வகுப்புகள் அவற்றைப் போக்கும் என்பதையும் நான் அறிவேன். ஆனால், இதனால் ஏற்படும் நன்மையை விட மோசமான தீமையை கரோனா ஏற்படுத்திவிடும் என்பதே எங்கள் அச்சம்!

அதனால், மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துவிட்டு, ஆன்லைன் வகுப்புகளை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதுவே சரியான நடவடிக்கையாக இருக்கும்!" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT