புதுச்சேரி: ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணையை நிறுத்த சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள், புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை இன்று முதல் நிறுத்தப்படுகிறது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை காணொலியில் வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதிமன்றத்தில் ஊழியர்களால் வைக்கப்படும் பெட்டிகளில் வழக்குக்குத் தேவையான ஆவணங்களை வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள புதுச்சேரி நீதிமன்றத்திலும் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. புதுவை நீதிமன்றத்துக்கு இன்று வந்த வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற அறையில் அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தனர். நீதிமன்றத்துக்கு வந்தோர் நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டு வாயில் கதவு மூடப்பட்டது.
இன்று விசாரணைக்கு வரவிருந்த வழக்குகளின் வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். நாளை முதல் அனைத்து வழக்குகளின் விசாரணையும் காணொலியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்ற வாயிலில் வழக்கு ஆவணங்களை வைக்க பெட்டிகள் வைக்கப்பட்டன.