பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருப்பூர் இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கீதா 
ஒரு நிமிட வாசிப்பு

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு 

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் : திருப்பூரில் குழந்தைகளை கழிவறை கழுவ வைத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி பெண் தலைமை ஆசிரியர் கீதா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் அருகே உள்ள இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார். இங்கு 14 ஆசிரியர்கள், இரண்டு பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இடுவம்பாளையத்தை சேர்ந்த கீதா (45) என்பவர், கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பள்ளியானது, கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுழற்சி முறையில் பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் தலைமை ஆசிரியர் கீதா, மாணவ, மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக மாணவ, மாணவியர் முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷூக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சாதிப் பெயரை குறிப்பிட்டு பேசுவதாகவும், பள்ளியில் உள்ள கழிவறையை ஆதிதிராவிடர் குழந்தைகளை வைத்து கழுவ வைத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், கடந்த வாரம் இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் விசாரணை மேற்கொண்ட நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் கீதாவை பணியிடை நீக்கம் செய்தார்.

இந்த நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சரவணக்குமார் என்பவர், தலைமை ஆசிரியர் கீதா மீது மங்கலம் காவல் நிலையத்தில் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். அதன்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் கீதா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT