காரைக்கால்: காரைக்காலில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 'ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், டிச.20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ”நல்லாட்சி வாரம்” கடைபிடிக்கப்படுகிறது.இதையொட்டி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் வட்டத்துக்குட்பட்ட மக்களுக்காக, 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் காரைக்கால் நகராட்சி மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அட்டவணை இனத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோர்களுக்கு ஊக்கத் தொகை, திருமண உதவித் தொகை, சாதி சான்று, வருமான சான்று, பட்டா மாற்ற சான்று உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
இம்முகாமில் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் சத்துணவு கண்காட்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ், சமூக நலத்துறை உதவி இயக்குநர் சத்யா, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உதவி இயக்குனர் காஞ்சனா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.