ஒரு நிமிட வாசிப்பு

விவசாயம் வளர்ந்திடவும், விவசாயிகள் வாழ்வு செழித்திடவும் நல்வாழ்த்துக்கள்: ஜிகே வாசன்

செய்திப்பிரிவு

சென்னை: தேசிய விவசாயிகள் தினத்தில் விவசாயம் வளர்ந்திடவும், விவசாயிகள் வாழ்வு செழித்திடவும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவின் 5-வது பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23-ம் தேதி வருடந்தோறும் விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விவசாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி விவசாயிகளின் பாதுகாவலராக விளங்கிய சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் விவசாயிகளை கௌரவிக்கும் வகையில் வருடந்தோறும் அவர் பிறந்த தினமான டிசம்பர் 23-ம் தேதி விவசாயிகள் தினமாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

விவசாயிகள் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். நாட்டின் வருமானத்தின் பெரும்பகுதி விவசாயத்தின் மூலமே அரசுக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்தில் மத்திய மாநில அரசுகள் பெரும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ வேண்டும்.

தேசிய விவசாயிகள் தினத்தில் விவசாயம் வளர்ந்திடவும், விவசாயிகள் வாழ்வு செழித்திடவும் நல்வாழ்த்துகள்" என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT