சென்னை: வேளாண் விளைபொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பருத்தியை மீண்டும் சேர்க்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், வேளாண் விளைபொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த பருத்தி இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை உழவர்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்!
தமிழ்நாட்டில் பருத்தியைக் கொள்முதல் செய்யும் வணிகர்கள், அவ்வாறு கொள்முதல் செய்யும் பருத்தியின் மதிப்பில் 1 சதவீத சந்தைக் கட்டணம் செலுத்துவதற்கு விலக்களிக்கும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதனால் பருத்திக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது!
அதனால், வேளாண் விளைபொருட்கள் பட்டியலில் பருத்தியை மீண்டும் சேர்க்க வேண்டும். பருத்திக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பருத்தியைத் தமிழக அரசே கொள்முதல் செய்ய தமிழ்நாடு பருத்திக் கழகம் என்ற நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும்!" என்று தெரிவித்துள்ளார்.