கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கமல் இரங்கல்

செய்திப்பிரிவு

நீலகிரி ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சூளூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக இன்று காலை இரு ஹெலிகாப்டர்கள் சென்றன. அதில் ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.

இந்த ஹெலிகாப்டர்தான் குன்னுர் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 5 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நீலிகரியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில்தான் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்ததாகவும், இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்திய விமானப் படை ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று கமல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT