பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருட்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
"பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
கடந்த பழனிசாமி ஆட்சியில் அரசு டெண்டர்களை எடுத்து புகாருக்குள்ளான திருப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கே பொங்கல் பரிசு விநியோக டெண்டர் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் பெரிய அளவு கமிஷன் கைமாறி இருப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு தரமான பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைப்பது சந்தேகம் தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இதற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? இல்லாவிட்டால் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் ஆகியவற்றில் பழனிசாமியும் ஸ்டாலினும் ஒன்று தான் என்பதை ஒப்புக்கொள்வார்களா?"
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.