வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"தென் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 8ஆம் தேதி (நாளை) கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
இதேபோல் நாளை மறுநாள் (09.12.2021) அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்."
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.