தடுப்பூசி போடாவிட்டால் அடுத்த வாரம் முதல் உணவகங்கள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், "கரோனா தடுப்பூசி முதல் டோஸ் மட்டுமாவது போட்டவர்கள் தான் இனி பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர். இதற்காக ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மாவட்டம் மிகவும் மோசமாக இருப்பதாக அண்மையில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் ரேஷன் கடை, திரையரங்கம், திருமண மண்டபம், வணிக வளாகங்கள், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட 18 இடங்களில் செல்லத் தடை விதிக்கப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 71 சதவீதம் பேரும் 2 ஆம் தவணை 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் தொற்று பரவல் கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தகுதியானவர் தவறாமல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.