போட்டித் தேர்வுகளில் தமிழ் கட்டாயம் என்கிற அரசாணைக்குத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
"கடந்த ஐந்தாண்டுகளில் வடமாநிலத்தோர் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகமானோர் ஆக்கிரமித்ததால் லட்சக்கணக்காணோர் படித்த தமிழக இளைஞர்களுக்கு அரசுப் பணி கனவாகிப் போனது.
தற்போது அரசாணை 133-ன் படி போட்டித் தேர்வுகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தும் தேர்வாணையத்தில் நிலை 1, 2, 2A போட்டித் தேர்வுகளில் தமிழ்த் தேர்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற முதன்மைத் தாள்கள் திருத்தப்படும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்தத் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றப்போகும் இனிப்புச் செய்தி.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையினால் எதிர்காலத்தில் அரசுப் பள்ளிகளின் கெளரவம் உயரும். மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். இந்த நடவடிக்கையை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்குத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்."
இவ்வாறு இளமாறன் தெரிவித்துள்ளார்.