அரசுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அரியலூர் பாஜக மாவட்டத் தலைவருக்கு 15 நாள் காவல் விதித்து மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்ட பாஜக மாவட்ட தலைவர் அய்யப்பன் அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும், அரசை எச்சரிக்கும் வகையில் பேசியதாக வாலாஜா நகர கிராம நிர்வாக அலுவலர் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் தனது வீட்டில் இருந்த பாஜக மாவட்டத் தலைவர் அய்யப்பனை இன்று (டிச 03) கைது செய்தனர். இதையடுத்து அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அய்யப்பனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி சந்திரசேகர் உத்தரவிட்டார். இதனையடுத்து பாஜக மாவட்டத் தலைவர் அய்யப்பனை காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.