ஒரு நிமிட வாசிப்பு

மழை பாதிப்பு: 2-வது நாளாக செம்மஞ்சேரி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சென்னை செம்மஞ்சேரி பகுதியில் இரண்டாவது நாளாக முதல்வர் ஸ்டாலின் இன்றும் ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் தமிழகம் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பருவமழையின் தாக்கல் அதிகரித்து காணப்பட்டது. பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இருப்பினும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக செம்மஞ்சேரி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலர்மேல்மங்கலாபுரம் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்ததுடன், கோரிக்கைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார். மேலும், செம்மஞ்சேரி காலனி, சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT