கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனக்கு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதாகவும் தெரிவித்திருந்தார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இன்னமும் நோய்ப் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் கோவிட்-19 தொற்றில் இருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
சீமான் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ''என் அன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன், அமெரிக்கப் பயணத்தை முடித்து நாடு திரும்பும்போது மருத்துவப் பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அண்ணன் விரைந்து முழு உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.