இளையான்குடி அருகே ரேஷன்அரிசி கடத்தி வந்த சரக்கு வாகனம் 
ஒரு நிமிட வாசிப்பு

வாகனத்தை மறித்த எஸ்.ஐ. மீது மோத முயன்ற ரேஷன் அரிசி கடத்தல் கும்பல்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வாகனத்தை மறித்த எஸ்.ஐ. மீது மோத முயன்ற ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

இளையான்குடி வட்டம் குமாரக்குறிச்சி முனியாண்டி கோயில் அருகே போக்குவரத்து எஸ்.ஐ பார்த்திபன் தலைமையில் காவலர்கள் கோட்டைச்சாமி, முனிக்கண்ணன் ஆகியோர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பரமக்குடியில் இருந்து இளையான்குடியை நோக்கி சரக்கு வாகனம் வந்தது. அதை எஸ்ஐ பார்த்திபன் மறித்தபோது, அவர் மீது மோதுவதுபோல் வாகனம் வந்தது. இதை பார்த்ததும் எஸ்ஐ சாலையை விட்டுக் கீழே இறங்கினார்.

இதையடுத்து வாகனம் நிற்காமல் வேகமாகச் சென்றது. அந்த வாகனத்தோடு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும் வேகமாகச் சென்றார். இதையடுத்து அந்த இரு வாகனங்களையும் எஸ்ஐ பார்த்திபன் மற்றும் போலீஸார் மோட்டார் சைக்கிளில் 2 கி.மீ. வரை விரட்டிச் சென்றனர்.

இதையடுத்து இரு வாகனங்களையும் நிறுத்திவிட்டு அதில் வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். மேலும் சரக்கு வாகனத்தைச் சோதனையிட்டபோது 25 கிலோ எடையுள்ள 40 மூட்டைகள் இருந்தன. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் எஸ்ஐ மீது மோதுவதுபோல் வாகனத்தை ஓட்டிச் சென்ற ரேஷன் கடத்தல் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். எஸ்.ஐ மீது வாகனத்தை மோத முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT