பருவமழை காரணமாக கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களில் மழை நீர் புகுந்துள்ளது.
இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கோமுகி மற்றும் மணிமுக்தா அணை நிரம்பியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் பெய்த இடைவிடாத மழையால் மணிமுக்தா அணைக்கு 11,624 கன அடி நீர்வரத்து வருவதால் அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியுள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 11,624 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், மணிமுக்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துச் செல்வதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.