கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதிகாலை 3 முதல் 4 மணி அளவில் சென்னை-புதுச்சேரி இடையே கரையைக் கடந்துள்ளது. தற்போது அந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வட தமிழகத்திற்கு மேல் நிலவி வருகிறது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலு இழக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தில் கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT