புதுச்சேரி மலட்டாற்றில் குளிக்கச் சென்று மாயமான இளைஞரை நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.
வடகிழக்குப் பருமழை காரணமாகப் புதுச்சேரியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி வடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (வயது 24) என்பவர் இன்று மலட்டாற்றில் குளிக்கச் சென்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உதயகுமாரின் சகோதரர் ரங்கபாஷ்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து மலட்டாறு பகுதியில் வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் உதவியுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உதயகுமாரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாகத் தேடியும் கிடைக்காததால், கூடுதலாக மோட்டார் இணைக்கப்பட்ட ரப்பர் படகு மூலம் ஆற்றுப் பகுதியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே, 3 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் உதயகுமாரின் உடலை மீட்டுக் கரை சேர்த்தனர்.