ஆழியாறு பகுதியில் பெய்துவரும் கனமழையால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வால்பாறைக்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாகப் பெய்து வருகிறது. நேற்று (நவ.17) இரவு முழுவதும் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ஆழியாறு பகுதியில் 66 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில் ஆழியாறு வனப்பகுதியில் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வால்பாறை சாலையில் ஒரு பகுதியில் சுமார் 5 அடி ஆழத்துக்குப் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை வனத்துறையினர் கவனமாகச் செல்லுமாறு அறிவுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை மீண்டும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்குப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி வால்பாறையில் இருந்து வந்த பேருந்துகள் சோதனைச் சாவடி அருகே நிறுத்தப்பட்டன. இதையடுத்து பொள்ளாச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.